-
-
-
Tenkasi
நமது குலதெய்வக் கோவிலான சோலைசேரி அருள்மிகு மகாயோகி ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீமருதப்ப சுவாமி திருக்கோவில் ஸ்தல வரலாறு மற்றும் இக்கோவில்களில் உறைந்துள்ள தெய்வங்களின் துதிகள், சிறப்புகள், மகிமைகள் குறித்து இப்புத்தகத்தில் மிக விரிவாகத் தொகுத்துள்ளேன்.
இப்புத்தகத்தில் உள்ள செய்திகள் அனைத்தும் முற்காலத்தில் சுவாமியை வருந்தி அழைப்பதற்காக எழுதப்பட்ட சக்தி வாய்ந்த வில்லுப்பாட்டுக்கள் மூலமாகவும், பல தலைமுறை சார்ந்த நமது முன்னோர்கள் வழி, வழியாகப் பின்பற்றி வந்த செவி வழிச் செய்திகள் வாயிலாகவும் அறியப்பட்டு, தற்கால சந்ததியினர் நமது கோவில் வரலாறு மற்றும் தெய்வங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக எளிய தமிழில் செய்திகளைத் தொகுத்துள்ளேன்.
இப்புத்தகத்தில் உள்ள ஸ்தல வரலாற்றை ஒரு முறை வாசித்தாலோ அல்லது பிறர் உதவியுடன் வாசிக்க கேட்டாலோ அவர்களின் பாவங்கள் அகலும்; நினைத்த காரியங்கள் நினைத்தவாறு ஈடேறும்; வாழ்வில் சுபிக்ஷம் பெருகும்; குலம் தழைக்கும் என்பது அனுபவத்தில் உணர்ந்தவர்களின் பேருண்மை ஆகும்.
இப்புத்தகத்தை உருவாக்க எனக்கு நல் வரமளித்த ஸ்ரீ பெரியாண்டவர் மற்றும் ஸ்ரீமருதப்ப சுவாமி ஆகியோரின் திருப்பாதம் தொட்டு வணங்கி இப்புத்தகத்தை அவர்களின் திருவடிகளில் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.
என்றும் பக்திப் பணியில்,
S. இராமர் ஆச்சாரி,
இராஜபாளையம்
முன்பொரு காலத்தில் காஞ்சி மாநகரத்தில் வாழும் ஸ்ரீமருதாருடையார். காஞ்சி மாநகரத்தை சிறப்பாக ஆண்டு வந்தார். அவருக்கு ஸ்ரீபூர்ண பொற்கொடியாள் மற்றும் வேளியாரம்மன் என்ற இரு மனைவியர் உண்டு. மேலும், அவருக்கு ஸ்ரீநாச்சியார் அம்மாள் என்ற தங்கையும் உண்டு. அவருடைய ஆட்சியில் வன்னிமார் இருவர் வன்னியச் சேனைத் தலைவர் பதவி நிர்வகித்து வந்தனர். மகாராஜா ஸ்ரீமருதாருடையார் தன் மனைவிகள் இரண்டு பேர்களுடன், தங்கை ஸ்ரீ நாச்சியார் அம்மாளுடன், ராஜகுருக்களான லாட சன்னாசி இருவருடன் மற்றும் வன்னியச் சேனைகள், வெள்ளை யானைப் படை மற்றும் யானைப் படை, குதிரைப் படைகள், காலாட் படைகளுடன் வட திசையிலுள்ள புண்ணிய ஸ்தலங்களில் தீர்த்தமாடச் சென்றார்கள். ஸ்ரீமருதாரு டையார் வெள்ளை யானையில் ஏறி வந்தார். மனைவிமார்கள் தங்க தண்டிகையுடனும், வெள்ளி தண்டிகையுடனும், மகாராஜாவின் தங்கை ஸ்ரீநாச்சியார் அம்மாள் முத்துப் பல்லாக்குடனும் புறப்பட்டனர்.
வட திசை கைலாய மலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தபின், காஞ்சி மாநகரை திரும்ப வந்த டைந்தனர். அதன்பின், தென் திசை தீர்த்தமாடப் புறப் பட்டனர். வரும் வழியில் காவேரியில் ஸ்நானம் செய்து இளைப்பாறிவிட்டு, மதுரை மாநகர் வந்து சொக்கநாதர் சுவாமியும், ஸ்ரீ அன்னை மீனாட்சியையும் தரிசனம் செய்துவிட்டு சிக்கந்தர் மலை வழியாகப் புறப்பட்டனர். வரும் வழியில் மேகமலையில் சிறிது நேரம் இளைப்பாறிய பொழுது, கூடமுடையார் என்னும் சிறுங்குலத்துப் பாண்டியனும் உடன் வருமாறு அழைத்தார்.
வரும் வழியில், ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்த பின்னர், இராஜபாளையம் அருள்மிகு மயூரநாதர் சுவாமி மற்றும் பெத்த நாச்சியார் அம்மனை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து வரும் வழியில் காயக்குடி ஆற்றில் ஸ்நானம் செய்து, இளைப்பாறி விட்டுப் புறப்பட்டனர். குமரிஅம்மனை தரிசிக்க கன்னியாகுமரி சென்று கொண்டிருந்த வழியில் சோலையாற்றின் கரையில் சோலையாகக் காட்சி அளித்ததால், பொதிகை மலையின் காற்றும் வீசியதால் சிறிது இளைப்பாற முடிவு செய்து கூடாரம் அமைக்க முற்பட்டனர்.
சோலையாற்றின் கரையில் இளைப்பாற, கூடாரம் அமைக்க முற்பட்ட போது பூமி காவலன், தலைமலை என்ற இருவர் வந்து கூடாரம் போடுவதைத் தடுத்தனர். அதோடு ஒரு கடிகை நேரம்கூட தங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். அது சமயம் தங்கை நாச்சியார் அம்மாள், தனது அண்ணன் ஸ்ரீ மருதாருடையாரை வணங்கி தான் சிவபெருமான் பார்வதியை வேண்டி வரம் பெற்று வருகிறேன் என்று உத்தரவு வேண்டினாள். ஸ்ரீமருதாருடையாரும் சம்மதிக்க தங்கை ஸ்ரீநாச்சியார் அம்மாள் சிவபெருமானை வேண்டி ஒற்றைக் காலில் ஊசி மேல் தவம் செய்தார். உடனே உமா மகேஸ்வரன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஸ்ரீநாச்சியார் அம்மாள் தனக்கு ஒரு பாசவலை வேண்டி வரம் பெற்றாள். பின்பு ஸ்ரீநாச்சியார் அம்மாள் திருபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது நின்று பாசவலையை வீசினார். அந்த பாசவலையில் எல்லா ஜீவ ராசிகளுடன் தலைமலை, பூமி காவலன் உட்பட அனைவரும் பிடிபட்டனர்.
ஸ்ரீநாச்சியார் அம்மாள் தனக்கு பூமி காவலன், தலைமலை மட்டும் பிடிபட வேண்டும் என்று எண்ணி தலைமலை, பூமி காவலனை பிடித்து வந்து அண்ணன் ஸ்ரீமருதாருடையார் முன்பு நிறுத்தினார். மிகப்பெரிய படைபலத்தை அந்த இருவரும் எப்படி வெற்றி கொண்டு தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்பதை அறிய தலைமலை மற்றும் பூமி காவலன் ஆகியோரை ஸ்ரீமருதப்ப சுவாமிகள் வினவினார். அதற்கு தாங்கள் இருவரும் பந்தப்புளி கிராம நிலங்கள் அனைத்தையும் தன் பார்வையின்கீழ் வைத்து இருக்கும் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமியின் காவலாளிகள். அவரின் மகிமையால் எங்களுக்கு வீரம் வந்தது என்றனர். அந்த மகரிஷியைக் கண்டு ஆசி பெற முட்டுறுத்தி கரையருகே சென்ற ஸ்ரீமருதப்பசுவாமி அவர்கள் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமியின் அருட்கொடையின்கீழ் தானும் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களும் தங்கியிருக்க அனுமதி கேட்டார்.
ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமிகள் ஸ்ரீமருதாரு டையவரும், அவருடைய பரிவாரங்களும் தங்க சம்மதித்தார். தாங்கள் கன்யாகுமரி யாத்திரை முடித்து வந்து தங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு, ஸ்ரீமருதாருடையார் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டார். போகும் வழியில் கரிவலம்வந்தநல்லூர் கோவிலில் இருக்கும் ஸ்ரீஉத்தண்டகாளையும் உடன் வருவதாகக்கூறினார். தீர்த்தயாத்திரை முடித்து சோலை நகர் வரும்பொழுது அழைத்துக் கொள்வதாகக் கூறினார் ஸ்ரீமருதாருடையார் சுவாமிகள். அதன்பின், கன்யாகுமரியில் தீர்த்தம் ஆடியபின் குற்றாலம் சென்று அங்கும் தீர்த்தம் ஆடி புறப்படத் தயாரானபோது, குற்றாலத்தில் இருந்த பேச்சியம்மாள் தானும் சுவாமியுடன் வர வேண்டினாள். சுவாமியும் சம்மதித்து ஸ்ரீபேச்சியம்மனையும் அழைத்துக் கொண்டு கரிவலம் வந்து, ஸ்ரீஉத்தண்டகாளையையும் அழைத்து சோலை நகரில் வந்து தன் பரிவாரங்களுடன் சந்தோசமாகக் கோவில் கொண்டுள்ளனர் என்பது புராணம் தரும் செய்திகளாகும்.
ஸ்ரீ மருதுடையார் சுவாமி அவர்களை ஸ்ரீ மருதப்ப சுவாமி என்றும், வெள்ளை யானையில் வலம் வருவதால் வெள்ளை யானைப் பாண்டியன் என்றும் அழைக்கப்படுகிறவர். ஸ்ரீமகாராஜா ஸ்ரீ மருதுடையார் சுவாமி அவர்களுக்கு, தேவலோக அரசர் இந்திரனுக்கு நிகரான ஐராவதம் என்ற வெள்ளை யானை வாகனமாகும். மூலஸ்தானத்தில் வெள்ளை யானையில் அமர்ந்து அருள் புரிகிறார்.
ஸ்ரீ மருதுடையார் என்ற ஸ்ரீ மருதப்ப சுவாமி அவர்கள் ஸ்ரீ உமா மகேஸ்வரர் சுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் நெய்வேத்யம் தேனும், தினைமாவும் படைக்கப்படுவதுபோல், இன்றும் ஸ்ரீ மருதுடையார் சுவாமி மற்றும் வேளியாரம்மையின் சந்நதிகளில் திருவிழாக் காலங்களில் சுவாமிக்கும், பூரண பொற்கொடியாள் மற்றும் வேளியாரம்மைக்கும் நெய்வேத்யமாக தேனும், தினைமாவும்தான் படைக்கப்படுகிறது.
மகாராஜா ஸ்ரீ மருதுடையார் அவர்கள், அரச குலத்தைச் சேர்ந்த அம்பாள் ஸ்ரீ பூரண பொற்கொடியாள் அவர்களை அரசு வழக்கப்படி மணந்து கொண்டதால், அரச சபையிலும் அரசு பரிபாலன நடவடிக்கைகளிலும் மகாராணி பூரண பொற்கொடியாள் மட்டுமே நடத்தி வந்ததாக வரலாறு கூறுகிறது.
ஸ்ரீ வேளியாரம்மன் அம்பாள் யாதவ குலத்துப் பெண்மணி, மகாராஜாவின் அரண்மனைக்கு பால், தயிர், மோர் எடுத்துச் சென்று கொடுப்பது வழக்கம். அதுசமயம் ஸ்ரீ மகாராஜா மருதாருடையவர் சுவாமிகள் வேளியாரம்மையைப் பார்த்தார். வேளியாரம்மாள் பேரில் மையல் கொண்டு கிழவர் வேடத்தில் சென்று காதலித்து மணம் செய்து கொண்டார். கிழவனார் வேடத்தில் சென்றதால் நாளடைவில் சுவாமிக்கு ஸ்ரீ மருதக்கிழவன் என்றும் அழைக்கப்படலானார்.
ஸ்ரீ வேளியாரம்மாள் மகாராஜாவுக்குப் பாதுகாப்பாகவும், அரச நடவடிக்கைகளிலும், வேறு போர்க்காலங்களிலும் உறுதுணையாக இருந்து செயல்படுவார். மகாராஜா ஸ்ரீ மருதாரு டையார் அவர்கள் வேளியாரம்மையை விரும்பி மணந்து கொண்டதாலும் அம்மையார் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததாலும், விழாக்காலங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நெய்வேத்தியமான தேனும், தினைமாவும் படைப் பதற்காக அம்மாளின் சமுதாயமான யாதவகுல மக்களை விரும்பி அழைத்து எச்சில்படாமலும், வாசனை நுகராமலும் இருக்க வாய் மற்றும் மூக்கை துணியால் கட்டி திணைமாவு இடித்து தேன் கலந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் படைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
மகாராஜா ஸ்ரீ மருதாருடையார் அவர்களின் அன்புத் தங்கை ஸ்ரீநாச்சியாரம்மாள். மணமாகாதவள் (கன்னிப்பெண்). மகாராஜாவின் (அண்ணனின்) ஆட்சி பரிபாலங்களில் அதீத ஈடுபாடு கொண்டவள். மகாராஜா ஸ்ரீ மருதாருடையார் அவர்களின் குலதெய்வம் ஸ்ரீ மகேஸ்வரனும். காமாட்சியம்மனும் ஆவார்கள். இவர்களது ஆட்சி காஞ்சி மாநகரத்தை தலைநகராகக் கொண்ட தேசமாகும். விழாக் காலங்களில் நாச்சியாரம்மாள் அருளாகி மருளாடியம்மன் பூப்பந்து விளையாடும் வைபவம் இன்றும் நடைபெறுவது மரபாக உள்ளது.
வன்னிமார் இருவர் சேனைகளின் தலைவர்கள் ஆவார்கள். பேய் பிடித்தவர்களுக்கு நாச்சியாரம்மாள். பேச்சியம்மன், உத்தண்டகாளை ஆகிய மூவர்களும் இணைந்தே பேய் விரட்டுவார்கள். பேய் பிடித்தவர்களிடமிருந்து அது விலகும்போது, கோவிலின் வடக்கில் உள்ள தேவியாற்றில் வன்னிமார் கேணி என்ற தீர்த்தத்தில், பேய் பிடித்த பெண் குளித்துவிட்டு பேச்சியம்மன் முன் வந்து அம்பாள் அருளாசி பெற்றால் பேய் பிடித்தது விலகும். பேய் பிடித்த பெண் சுபிக்ஷம் பெறுவாள்.
மகாராஜா ஸ்ரீ மருதாருடையவரின் தீர்த்த யாத்திரை குற்றாலத்தில் தீர்த்தமாடி முடித்தபோது, அங்கு இருந்த ஸ்ரீ பேச்சியம்மாள் தானும், மகாராஜாவின் பரிவாரங்களுடன் சோலைசேரி வந்து சுவாமிக்குத் தொண்டு செய்வதாக வேண்டியதின் பேரில் ஸ்ரீமருதாருடையவரும் சம்மதித்து தன் பரிவாரங்களுடன் அழைத்து வந்தார். ஸ்ரீ அம்பாள் பேச்சியம்மனுக்கு திருமஞ்சனம்தான் பிடித்தமானது.
கரிவலம் வந்த நல்லூர் பால் வண்ண நாதர் கோவிலுக்கு முன்னோடியாகவும் வாயிற்காப்பாளரும் ஆகும். மகாராஜா ஸ்ரீமருதாருடையவரையும் அவர்களுடைய சேனை பரிவாரங்களையும் பார்த்து பெருமிதம் கொண்டு தானும், அவர்களுடன் உடன் வருவதாக வேண்டினார். சுவாமி மருதாருடையார் அவர்கள் ஸ்ரீ உத்தண்டகாளையையும் தங்களுடன் அழைத்து சோலைசேரி வந்து அமர்ந்து கொண்டார்.
சுவாமியின் நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், மற்றும் வெண் பொங்கல்.
லாட சன்னாசி இருவர்களும் மகாராஜாவின் ராஜகுருக்கள் ஆவார்கள். அவர்கள் வேறு மொழி பேசுபவர்கள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பூரண உடல் நலம் கொடுத்து காப்பவர்கள்.
இவர் ஒரு மிகப்பெரிய சிவத் தொண்டர். ஆதியில் ஸ்ரீபெரியாண்டவர் சிவனை நோக்கி தவம் செய்து வந்தார். இயற்கை எழில் சூழ்ந்த சோலைசேரி பந்தப்புளி கிராமத்தில் முள்துருத்தி கரையருகே வில்வ மரத்தடியில் உட்கார்ந்து தவம் செய்து வந்தார். தன்னை நாடி வரும் மக்களுக்கு கஷ்டங்களைத் தீர்த்து வந்தார். அவரின் கோடி பார்வையில் பந்தப்புளி கிராமம் வரை எல்லா நிலங்களும் இருந்து வந்தது. அந்தப் பகுதியில் முரட்டுத்தனமான குணம் கொண்ட ஸ்ரீதலைமலை மற்றும் பூமி காவலன் என்ற இரண்டு முரடர்கள் இருந்து வந்தனர். ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி கட்டுப்பாட்டில் ஏவல் வேலை செய்பவர்களாக அவர்கள் இருந்தனர். எந்தவிதமான காரியங்களையும் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமியின் துணையுடன் ஜெயம் கொள்ளக்கூடிய திறமை படைத்தவர்கள். ராஜகுமாரி ஸ்ரீநாச்சியாரம்மாளின் பாசவலையில் பிடிபட்டவர்கள். விழாக் காலங்களில் குடி அழைக்க வரும் சமயத்தில் ஸ்ரீபெரியாண்டவர் சுவாமி கோவிலில், தலைமலை, பூமி காவலன் ஆகிய இருவரில் ஒருவர் மருளாடிக்கு அருளாசியாக வந்து பின் கை கட்டப்பட்டது போல் புறப்பட்டு ஸ்ரீ மருதாருடையவர் கோவில் முன்பு வரை வருவது மரபு.
ஆதிகாலத்தில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த மக்கள், வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி காலணிகளுக்குத் தோலாகவும். கொம்புகளை தலை செருகுகளாகவும் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். வழக்கம்போல் ஒரு நாள் பட்டன்மார்கள் நான்கு பேர் வனப் பகுதியில் இருந்த மாடு ஒன்றை வேட்டையாடி கூறுபோட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், இந்த மாடு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருடையது. இதை வெட்டி நீங்கள் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்று கூற, இதைக் கேள்விப்பட்ட கிராமத்து மக்கள் வந்தனர். அதைப் பார்த்த பட்டன்மார்கள் கோவிலுக்குள் ஓடி, ஸ்ரீமருதப்ப சுவாமியை வணங்கி உயிருக்கு பயந்து, தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தி சுவாமிகளிடம் தங்களைக் காப்பாற்ற வேண்டுமாய் வேண்டிக் கொண்டனர்.
ஸ்ரீ மருதப்ப சுவாமியை வணங்கி மாட்டுத் தலை மான் தலையாகவும், மாட்டுக் கறி மான் கறியாகவும்,மாட்டுத் தோல் மான் தோலாகவும் மாற வேண்டுமாய் வேண்டிக் கொண்டனர். அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தங்களது தவறை மன்னிக்க வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, மனம் இறங்கி அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஓர் அதிசயம் நிகழ்த்தினார் ஸ்ரீமருதாருடையார். ஊர் மக்கள் நேரில் பார்க்கும்பொழுது மாட்டுக் கறி மான் கறியாகவும், மாட்டுத் தோல் மான் தோலாகவும், மாட்டுத் தலை மான் தலையாகவும் உருமாறி இருப்பதைக் கண்டு பட்டன்மார்களின்மீது குற்றம் இல்லை என ஒப்புக் கொண்டு விட்டுச் சென்றனர்.
தங்களைக் காப்பாற்றியதற்காக பட்டன்மார்களில் இருவர் மருதப்ப சுவாமியின் முன்பாக நின்று வேல் பாய்ந்தனர் என்றும், உடனிருந்த மேலும் இருவர் பயந்து ஓடியபொழுது சிறிது தூரத்திலேயே கல்லாகி அமைந்து நின்றுவிட்டனர் என்பதும் செவிவழிச் செய்தியாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அன்று முதல் பட்டன்மார்கள் இருவரும் இங்குள்ள தெய்வங்களுக்குத் தொண்டு செய்வதே தங்களது முழுமுதற்கடமை என எண்ணி அங்கேயே தெய்வமாகிவிட்டனர். மேலும், குல தெய்வமாக வழிபடும் மக்களுக்கு தீட்டுக் காலங்களில் காப்பதும் பட்டன்மார்களின் கடமையாகும் என்பது குல தெய்வ வழிபாடு செய்யும் மக்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
விழாக்காலங்களில் வில்லடி நிகழ்ச்சிக்கு வேண்டிய நாண், அருந்ததி சமுதாய மக்களால் தயாரிக்கப்பட்டு வில்லடி நிகழ்ச்சி நடத்திட உதவுவது தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, பந்தப்புளி கிராமம், சோலைசேரியில் அமைந்துள்ள விஸ்வகர்ம சமுதாயத்தைச் சார்ந்த தெற்கு வெங்காநல்லூர் வகையறா, புலவர் வழி வகையறா, கூனங்குளம் வகையறா. புனல்வேலி வகையறா மற்றும் முதுகுளத்தூர் வகையறா குலதெய்வ வழிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி, அருள்தரும் புரண பொற்கொடியாள், வேளியார் அம்மன் சமேத அருள்மிகு மருதப்ப சுவாமி திருக்கோவில்
நமது கோவிலில் மேள, தாளம் கிடையாது. ஆனால், வில்லுப்பாட்டு மூலமாக சுவாமியையும், அம்மனையும் வருந்தி வேண்டிப் பாட்டாகப் பாடுவது மரபாக உள்ளது.
இராஜபாளைத்திலிருந்து (சங்கரன்கோவில் செல்லும் வழியில்) 13-வது கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. திருநெல்வேலி, கோவில்பட்டி பேருந்தில் செல்பவர்கள் பெருமாள்பட்டி சோலைசேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோவிலுக்குச் செல்லலாம்.
பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விழாக் காலங்கள் தவிர்த்து, பிற நாட்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
இக்கோவில் பற்றி மேலும் விபரங்கள் அறிய, அருள்மிகு சோலைசேரி ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி ஸ்ரீமருதப்ப சுவாமி திருக்கோவில் விஸ்வகர்ம குலதெய்வ வழிபாட்டு சங்கத்தின் தலைவர் தெய்வத்திரு.ந.இராமர் ஆச்சாரி அவர்களின் புதல்வர் திரு வேல்முருகன் ஆச்சாரி 9443554038 அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.